உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒரே மாதத்தில் தங்கம் ரூ.2,200 விலை உயர்வு

ஒரே மாதத்தில் தங்கம் ரூ.2,200 விலை உயர்வு

சேலம்: ஒரே மாதத்தில் தங்கம் பவுனுக்கு, 2,200 ரூபாய் உயர்ந்துள்ளது.கடந்த சில மாதங்களாக தங்கம், வெள்ளி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் தங்கம் கிராம், 7,065, பவுன், 56,520 ரூபாய், வெள்ளி கிராம், 99, பார் வெள்ளி, 99,000 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று தங்கம் கிராமுக்கு, 25 உயர்ந்து, 7,090, பவுனுக்கு, 200 ரூபாய் உயர்ந்து, 56,720க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கடந்த, 17ல் தங்கம் கிராம், 6,815, பவுன், 54,520, வெள்ளி கிராம், 95, பார் வெள்ளி, 95,000 ஆயிரத்துக்கு விற்பனையானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் கிராமுக்கு, 275, பவுனுக்கு, 2,200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு, 4.00, பார் வெள்ளி, 4,000 ரூபாய் உயர்ந்துள்ளது.இதுகுறித்து, சேலம் மாநகர தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தகுமார் கூறியதாவது: அமெரிக்காவின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கிறது. இதுவும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. வெற்றி பெறுபவரால், அரசின் கொள்கை முடிவுகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்வது குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு சற்று அதிகமாக இருக்கிறது. இதுதவிர, சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கம் விலை புதிய உச்சமாக, 2,683 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. நம் நாட்டில் பண்டிகை காலம் என்பதாலும் விலை உயர்கிறது. தங்கம் விலை உயர்வால், தீபாவளி விற்பனை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில், பணியாளர்கள், தொழிலார்களுக்கு போனஸ் வழங்கப்பட்ட பின், அவர்கள் சேமிப்பு செய்ய வேண்டும் என்ற காரணத்தால் தங்கத்தில் முதலீடு செய்வர். பெண்களுக்கு தங்கத்தின் மீது நம்பிக்கை அதிகமாக இருப்பதால், தங்கம் அரை பவுனாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எனவே, பண்டிகை நெருங்கும் நேரத்தில் தங்கம் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை