கனமழையால் சேற்றில் சிக்கிய அரசு பஸ்
மேட்டூர்: மேட்டூரில் கொட்டி தீர்த்த கன மழையால், அரசு பஸ் சேற்றில் சிக்கியது.சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில், 60 பஸ்களை நிறுத்தலாம். இதர பஸ்களை பணிமனை அருகே சாலையோரம் நிறுத்துகின்றனர். பணிமனை எதிரே நகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்ட இடம் தேர்வு செய்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்திலும் அரசு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.மேட்டூர் சுற்றுப்பகுதியில் நேற்று அதிகாலை, 4:00 முதல், காலை, 7:00 மணி வரை பரவலாக கனமழை பெய்தது. இதனால் வணிக வளாகம் கட்டும் இடத்தில் தண்ணீர் தேங்கியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த, 20ம் நெம்பர் டவுன் பஸ்சின் பின் டயர் சேற்றில் சிக்கியது. இதனால் பஸ்சை இயக்க முடியாமல், மாற்று பஸ் அனுப்பி வைக்கப்பட்டது. பணிமனை அலுவலர்கள் போராடி மீட்டனர்.