ஆசிரியர் சஸ்பெண்ட்டை திரும்ப பெற அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
தலைவாசல்,:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, கிழக்கு ராஜாபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ஜெயபிரகாஷ். அவரது கால்களை, மாணவர்கள் பிடித்து விட்டதாக, வீடியோ பரவியது. இதையடுத்து அந்த ஆசிரியரை, 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.நேற்று காலை, 7:00 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், கிழக்கு ராஜாபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ' ஆசிரியர் ஜெயபிரகாஷ் மீது தவறு இல்லை. அவரது, சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.வீரகனுார் போலீசார் பேச்சு நடத்திய பின், 8:00 மணிக்கு மாணவ, மாணவியர் கலைந்து சென்றனர். பின், மாணவர்களது பெற்றோர், காலை, 8:20 மணிக்கு, மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாணவ - மாணவியரும் பங்கேற்றனர்.அப்போது போலீசார், 'வரும் 25ல், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கு வந்து விசாரித்து தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளனர்' என, உறுதி அளித்தனர். இதனால், 9:20க்கு, மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், சேலம் - பெரம்பலுார் மாவட்ட எல்லை சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.