| ADDED : மே 29, 2024 07:54 AM
தலைவாசல் : கோடை காலத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி நல்ல பலன் தரும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து தலைவாசல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கவிதா அறிக்கை:பசுந்தாள் உரம் என்பது பசுமையான, சிதைக்கப்படாத பொருட்களை உரமாக பயன்படுத்திட, அதே நிலத்தில் விதைத்து அந்த தாவரம் பூ பூப்பதற்கு முன் அதே நிலத்தில் மடக்கி உழுது உரமாக்க வேண்டும். இது பசுந்தாள் உரப்பயிர் ஆகும். சணப்பு, தக்கை பூண்டு, மணிலா அகத்தி, கொளிஞ்சி போன்ற தாவரங்கள், பசுந்தாள் உரங்களுக்கு எடுத்துக்காட்டு. இவை காற்றில் உள்ள நைட்ரஜனை கிரகித்து வேர், தண்டு முடிச்சு வாயிலாக நிலத்தில் தழைச்சத்தை சேமிக்கிறது.நன்றாக கோடை உழவு செய்து, அடுத்த சாகுபடிக்கு தயாராக உள்ள நிலையில் இந்த விதைகளை நிலத்தில் விதைக்கலாம். ஏக்கருக்கு, 1,5-20 கிலோ வரை தேவைப்படும். விதைத்த பின் நீர்பாசனம் செய்து, 4,5-50வது நாளில் அவற்றை மடக்கி உழவு செய்வதால் அவை மட்கி மண்ணில் இரண்டற கலந்து பருவ பயிர் சாகுபடிக்கு தயாராகலாம்.பசுந்தாள் உரப்பயிர்களை பயன்படுத்துவதால் நிலத்தின் மண்வள கட்டமைப்பு மாறி, மண்ணின் கரிமத்தன்மை அதிகரிக்கும். மண்ணில் காற்றோட்டம் ஏற்படும். இறுகிய தன்மை மாறும். நீர் பிடிப்புத்திறன் அதிகரிக்கும். களைச்செடிகளை கட்டுக்குள் வைக்க உதவும். மண் அரிப்பையும் தடுக்க உதவும். விளைச்சலில், 15- முதல், 20 சதவீதம் அதிகரிக்கும். அதனால் விவசாயிகள் கோடைகால இறுதியில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து அவை பூக்கும் தருவாயில் மடக்கி நன்கு உழவு செய்ய வேண்டும். பின் பருவ பயிர் சாகுபடி மேற்கொண்டால் அதிக மகசூல் கிடைக்கும்.