தர்மஸ்தலா வழக்கில் மவுனம் கலைத்தார் ஹெக்டே எஸ்.ஐ.டி., விசாரணையை வரவேற்பதாக பேட்டி
பெங்களூரு, தர்மஸ்தலா வழக்கு பற்றி, மஞ்சுநாதா கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே மவுனம் கலைத்துள்ளார்; எஸ்.ஐ.டி., விசாரணையை வரவேற்பதாக கூறி உள்ளார்.தர்மஸ்தலா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே நேற்று அளித்த பேட்டி: கடந்த 20 ஆண்டுகளாக தர்மஸ்தலாவில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யானவை; ஆதாரமற்றவை. சமூக வலைதளங்களில் மஞ்சுநாதா கோவிலை பற்றி விமர்சிக்கப்படும் விதம் என்னை காயப்படுத்தி உள்ளது. எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டதை நாங்கள் வரவேற்கிறோம். விசாரணை மூலம் உண்மை வெளிவரட்டும்.தர்மஸ்தலா மீதான அவப்பிரசாரம் நீக்கப்பட வேண்டும். நாங்கள் செய்யும் நல்ல வேலைகளால் கோபம் அடையும் சில தனிநபர்கள், தவறான பிரசாரம் செய்கின்றனர். தர்மஸ்தலாவில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு மரணம் ஏற்படும்போது, கிராம பஞ்சாயத்துக்கு தகவல் தெரிவிப்போம். அவர்கள் உரிய முறையில் உடலை அடக்கம் செய்வர். இளைஞர்கள் இடையே சமூக வலைதளங்கள் மூலம் நச்சு விதை விதைக்கப்படுகின்றன. மத நம்பிக்கையில் இருந்து விலகி இருக்க அவர்கள் மறைமுகமாக மிரட்டப்படுகின்றனர்.சவுஜன்யா கொலை தொடர்பாக, எங்கள் குடும்பத்தின் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது. அனைத்து வகையான விசாரணைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். கோவில் சொத்துகளை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. எங்கள் பெயரில் குறைந்த சொத்துகள் உள்ளன. மற்ற சொத்துக்கள் அனைத்தும் அறக்கட்டளை பெயரில் உள்ளன. தர்மஸ்தலா வழக்கில் அரசியல் நடப்பதாக நான் நினைக்கவில்லை. சில சக்திகள், கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த விரும்புகின்றன. அனைத்து கட்சிகளும் கோவிலை ஆதரிக்கின்றன. தர்மஸ்தலா வழக்கில் சதி நடந்ததாக, துணை முதல்வர் சிவகுமார் கூறியதை வரவேற்கிறேன். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். இந்த வழக்கு, எங்களை பாதிக்கவில்லை. வழக்கம் போல வழிபாடு, சடங்கு நடக்கும். கோவிலுக்கு எதிரான சதியில் யார் உள்ளனர் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லை. எஸ்.ஐ.டி., தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளி கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.