சேலம்: ''மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும்,'' என, அமைச்சர் நேரு கூறினார். சேலம், அணைமேட்டில், 92.40 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:சேலத்தில், 150 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைப்பது, ஏரிகளை சீரமைப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சேலம் ஊரக பகுதிகள் முழுதும் குடிநீர் வழங்கப்பட்டுவிட்டது. நகர் பகுதிகளில் பரிசோதனை முறையில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேட்டூர் அணைக்கு மழை பெய்தால் தண்ணீர் வரும். கர்நாடகாவிலும் தண்ணீர் இல்லை. ஆனால் நாம், 34 டி.எம்.சி.,க்கு மேல் திறக்க வேண்டும் என, நடுவர் மன்றத்தில் கூறியும், திறக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பேசி வருகின்றனர். முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அ.தி.மு.க., ஆட்சியில் இருப்பதை விட நல்ல முறையில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. குறை சொல்வதற்காகவே பேசி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், தி.மு.க.,வின் சேலம் எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.