உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சட்டவிரோத குடிநீர் இணைப்பு வழங்கல்?தி.மு.க., கவுன்சிலருக்கு எதிர்ப்பு, ஆதரவாக சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

சட்டவிரோத குடிநீர் இணைப்பு வழங்கல்?தி.மு.க., கவுன்சிலருக்கு எதிர்ப்பு, ஆதரவாக சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

சேலம், சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு வழங்குவதாக கவுன்சிலர் மீது குற்றம்சாட்டி, கார்கில் நகர் மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவுன்சிலருக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.இதை அறிந்து மறுதரப்பினரும் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். சேலம் மாநகராட்சி, 47வது வார்டு, ஆண்டிப்பட்டி, கார்கில் நகரில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்ட நிலையில், சில நாட்களாக, 10 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்படுகிறது எனக்கூறி, அப்பகுதி மக்கள், நேற்று காலை, 9:30 மணிக்கு, பிரபாத் பகுதியில், திருச்சி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.மேலும் பணம் வாங்கிக்கொண்டு, கவுன்சிலர் தரப்பில் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதாக குற்றம் சாட்டினர். செவ்வாய்ப்பேட்டை போலீசார் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். ஒரு வழியாக போக்குவரத்து சீரானது.தீக்குளிக்க முயற்சிஆனால் சிறிது நேரத்தில், அந்த வார்டு கவுன்சிலரான, தி.மு.க.,வை சேர்ந்த புனிதா மீது குற்றம்சாட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு ஆதரவாக, ஒரு தரப்பினர், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறித்து மறு தரப்பினரும் மீண்டும் போராட வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பிலும் தலா ஒரு பெண், தீக்குளிக்க முயன்றனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். பின், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ