பாலிமர் டிவி டிரைவர் சாவில் மர்மம் வீடியோ குறித்து விசாரணை
சேலம்:'பாலிமர் டிவி'யில் பணிபுரிந்து வந்த கார் டிரைவர் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை, எண்ணுார், சத்தியவாணிமுத்து நகரைச் சேர்ந்த குமார், 27, என்பவர், சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், பாலிமர் 'டிவி' கட்டடத்தின் மூன்றாம் மாடியில் தங்கி, கார் டிரைவராக பணிபுரிந்தார். உதவி கமிஷனர்
நேற்று காலை, 10:00 மணிக்கு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக, அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உதவி கமிஷனர் அஸ்வினி தலைமையில் போலீசார் சென்றபோது, துணியால் துாக்கிட்டு டிரைவர் இறந்து கிடப்பது தெரிந்தது. உடலை மீட்ட போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தை குமார் போலீசாருக்கு அனுப்பியதாகவும், வீடியோ வெளியிட்டு இறந்ததாகவும் தகவல் பரவியது.போலீசார் கூறியதாவது:பாலிமர் தொலைக்காட்சி நிறுவனத்தில் குமார், இரண்டு ஆண்டுகளாக பணியாற்றினார். ஆறு மாதங்களுக்கு முன், இவர் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியதால், அவரை பணியில் இருந்து நீக்கினர். பின், சேலத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும்படி கூறியதால், ஆறு மாதமாக இங்குள்ள நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்தார். கடந்த, 16ல் ஆத்துாரில் உறவினரை பார்க்க, அலுவலக காரை எடுத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டது. சேதமடைந்த காரை, சர்வீஸ் சென்டரில் விட்டபோது, காருக்கு காப்பீடு இல்லாததும், பல லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், சர்வீஸ் சென்டர் ஊழியர்கள் தெரிவித்தனர். மன உளைச்சல்
இத்தகவல் சென்னை அலுவலகத்துக்கு தெரிய வந்ததால், காரை சரி செய்துவிட்டு, வேலையை விட்டு நின்று விடும்படி, குமாரிடம் நிர்வாகத்தினர் கூறினர். இதனால் மன உளைச்சலில் இருந்த குமார், தற்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அவரது உடலில் அதிகளவு ரத்தம் வெளியேறியுள்ளது. அருகே ஒரு, 'ஸ்பானர்' கிடந்ததால் சந்தேகம் ஏற்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின், தற்கொலையா, கொலையா என தெரிய வரும். இறக்கும் முன் அவர் வீடியோ பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இன்ஸ்பெக்டர் காந்திமதி கூறுகையில், ''கடிதம் ஏதும் கிடைக்கவில்லை; வீடியோ உள்ளது. அதில், குமார் இறக்கும் முன் பேசியது குறித்து விசாரணை நடக்கிறது,'' என்றார்.கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறுகையில், ''இச்சம்பவம் குறித்து கடிதம் ஏதும் எடுக்கவில்லை. தற்கொலை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அதற்கு பின்தான், என்ன நடந்தது என தெரிவிக்கப்படும்,'' என்றார்.