பாகிஸ்தானியர் குறித்து விசாரணை
சேலம்:சேலம் மாவட்டத்தில், பாகிஸ்தானியர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தியாவில் தங்கி இருக்கும், பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, தமிழகத்தில் பாகிஸ்தானியர் குறித்து விசாரித்து கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையை தனிப்பிரிவு போலீசார் மேற்கொண்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'பாகிஸ்தானில் இருந்து தொழில், மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட, 16 வகைகளில் பாஸ்போர்ட் பெற்று யாராவது வந்துள்ளார்களா? என துாதரகம், அரசு சார்பில் கேட்கப்பட்டது. இது குறித்து, மாவட்ட தனிப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், எந்த பாகிஸ்தானியரும் சேலம் புறநகர் மாவட்டத்தில் இல்லை என தெரியவந்துள்ளது. விசாரணை குறித்து அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது,' என்றனர்.