சேலம், சேலம் மாவட்டம் ஓமலுாரை சேர்ந்தவர் வெங்கடேசன், 45. இவர் உள்ளிட்ட சிலர், சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:ஓமலுார் டவுனில், 'வெங்கடேஷ்வரா ஜூவல்லர்ஸ்' நகை கடை நடத்துகிறேன். அடகு நகைகளை விலைக்கும் வாங்குகிறேன். எங்கள் கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளரான காமலாபுரத்தை சேர்ந்த ஜெயந்தி, 'ஓமலுாரில், 'கே.எல்.எம்., கோல்டு' நிதி நிறுவனத்தில், 80 கிராம் நகையை, 5 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்திருக்கிறேன். 5 லட்சம் ரூபாய் செலுத்தி, அந்த நகையை பெற்றுக்கொள்ளுங்கள்' என தெரிவித்தார். இதனால் அந்த நிறுவனத்துக்கு சென்று, மேலாளர் விஜயராணியிடம் கேட்டபோது, 'ஜெயந்தி பெயருக்கு, 5 லட்சம் ரூபாய் வங்கியில் செலுத்தினால் நகையை பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.கடந்த மார்ச், 7ல், 5 லட்சம் ரூபாய் செலுத்தினேன். நகையை தரவில்லை. பணமும் திரும்பி வந்து சேரவில்லை. இதுகுறித்து ஓமலுார் போலீசில் புகார் அளித்தபோது, சி.எஸ்.ஆர்., பதிவு செய்து விசாரிப்பதாக தெரிவித்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், எஸ்.பி., விசாரித்து, ஏமாற்றிய இரு பெண்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தரவேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.