ரயிலில் வாலிபரை தள்ளி கொலை ஜார்க்கண்ட் வாலிபருக்கு காப்பு
சேலம்: படியில் அமர்ந்து பயணிக்க இடம் தராத ஆத்திரத்தில், ஓடும் ரயிலில் இருந்து வாலிபரை தள்ளி கொலை செய்த, ஜார்க்கண்ட் மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம் குரும்பேரி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் நவீன், 35. இவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில், சூப்பர்வைசர். இரு நாட்களுக்கு முன், பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு சொந்த ஊர் செல்ல சேலம் வந்தார். அங்கிருந்து நள்ளிரவில், டில்லி செல்லும் கேரளா விரைவு ரயிலில் முன்பதிவற்ற பெட்டியில் ஏறி, படியில் அமர்ந்து பயணித்தார். அவரிடம் படியில் இடம் கேட்டு, தகராறு செய்த வடமாநில வாலிபர், திடீரென அவரை, காலால் எட்டி உதைத்தார். இதில் கீழே விழுந்த அவர் இறந்தார்.இதைப் பார்த்த சக பயணியர், வடமாநில வாலிபரை சரமாரியாக தாக்கி, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் சேலம் போலீசார் விசாரித்தனர்.அப்போது அவர், ஜார்க்கண்ட் மாநிலம், துல்கா மாவட்டம், மசிலியா பகுதியைச் சேர்ந்த மனோஜ் டுடு மகன் பர்தேஸ்வர் டுடு, 27, என்பதும், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரிந்தது. பர்தேஸ்வர் டுடுவை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.