| ADDED : ஜன 21, 2024 11:59 AM
நமது கலைஞரை இருபந்த்தைந்து ஆண்டுகளுக்கு முன் சந்தித்ததிலிருந்து, இன்று வரை அவருடைய வாழ்க்கையும், என்னுடைய வாழ்க்கையும் இணைந்து ஒன்றாக உய்ய இருவரும் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றினாலும், ரயில்வே தண்டவாளங்களைப் போல ஒன்றாக இணைந்துவிடாமல், அதே நேரத்தில் பிரிந்து விலகியும் விடாமல் தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது.வாழ்க்கையிலே அடைய வேண்டிய வெற்றிகளுக்காக நடத்திய போராட்டங் களில் இருவரும் ஒரே மாதிரிதான் அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம்.அவர் அரசியலோடு கலையையும் இணைத்துக் கொண்டார். நான் கலையோடு அரசியலையும் இணைத்துக் கொண்டேன். இப்படிப்பட்ட நிலையில் தான் நானும் கலைஞரும் சந்தித்தோம்... பழகினோம்.கலைஞர்கள் என்ற வகையில் ஒன்றாகத் தொழிலில் ஈடுபட்டோம். நண்பர்கள் என்ற முறையில் வளர்ந்தோம். அன்பு சகோதரர்களாக அண்ணாவின் அரசியல் குடும்பத்தில் அவருடைய அருமைத் தம்பிகளாக இணைந்தோம்... கலைஞர் அரசியலில் இருந்து கொண்டு கலைத்துறைக்கு வந்து, கலைத் துறையிலிருந்து என் போன்றாரை அரசியலுக்கு இணைத்துக் கொண்டார்.இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இவரிடம் நான் பழகுவதில் அறிந்த சிறப்பு, வேறு யாரிடமும் இல்லை என்று சொல்லத்தக்க அளவில் உள்ள லட்சியத்தை நிறைவேற்றுவதில் வெறி, அதை செயல்படுத்துவதில் வெறி, -இந்தக் குணங்கள் இவருடைய பிறவிச் சிறப்புகள் ஆகும்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் புதிதாகத் திரைப்படத்திற்கு உரையாடல் எழுத வந்திருக்கி றார்... 'அபிமன்யு' படத்திலே இவர் எழுதிய உரையாடல்கள் இவர் பெயரிலே வெளியிடப்படவில்லை. ஆனாலும் இவருடைய கொள்கையை அதிலே புகுத்தி அந்தச் சிறப்பை, வேறு ஒருவர் பெற்றாலும் பரவாயில்லை என்று கருதி, தான் விரும்பும் கொள்கைகள் படத்தில் வந்தால் போதும் என்று அதிலே புகுத்தினார்.அந்தக் காலத்தில் கொள்கைக்காக உரையாடல் எழுதினால் யாருடைய பகையாவது வருமோ என்ற கவலையே இல்லாமல் எழுதினார். முதல் படம் தான். இன்னொருவர் தயவை எதிர்பார்க்கும் நேரம் தான். வாழ்க்கையில் சாதாரண நிலைதான் ஆனாலும் கொள்கை... கொள்கை... கொள்கை.இருபது வயதுக்கும் குறைந்த இளைஞனாக இருந்தபோது பாண்டிச்சேரித் தெருவில் கொள்கைப் பிரசார நாடகம் நடத்தியதால் தானே... இத்தகைய லட்சிய வெறிதான் அவரைச் செயல் வீரராக்கியது. மிகச் சிறந்த எழுத்தாளராக்கியது.. நல்ல நடிகராக்கியது. மாற்றாரும் புகழும் பத்திரிகையாளராக்கியது... புயலும் தென்றலும் கலந்த பேச்சாளராக்கியது... அண்ணாவின் அருமைத் தம்பியாக்கியது... தமிழக ஆட்சியின் தலைவராக்கியது...(மலரும் நினைவுகள்)