உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு; 4 நாட்களாக இருளில் மக்கள் அவதி

ஏற்காட்டில் நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு; 4 நாட்களாக இருளில் மக்கள் அவதி

ஏற்காடு: ஏற்காட்டில் பிரதான மலைப்பாதை மட்டுமின்றி குப்பனுார் சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், 4 நாட்களாக இருளில் மூழ்கி மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த, நவ., 29 முதல், நேற்று காலை வரை மழை பெய்து வந்தது. மதியம் ஓய்ந்து, ஏற்காட்டில் வெயில் தென்பட்டது. இந்த மழையால் ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மின் கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்தன. இதனால் கடந்த, 30 முதலே, ஏற்காட்டில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. ஏற்காட்டின் பிரதான மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. இதனால் ஏற்காடு மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகினர். மலைப்பாதையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.ஆனால் நிலச்சரிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஏற்காடு வரும் வாகனங்கள், குப்பனுார் மலைப்பாதை வழியே வந்து சென்றன. நேற்று முன்தினம் இரவு, ஏற்காடு மலைப்பாதையில் சில இடங்களில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. தவிர, குப்பனுார் மலைப்பாதையில் இரு இடங்கள், கொட்டச்சேடு - பெலாத்துார் இடையே ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. குப்பனுார் மலைப்பாதையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஏற்காட்டில் இருந்து சேலத்துக்கு வேலைக்கு செல்லும் மக்கள், கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.

அலட்சியம்

குப்பனுார் மலைப்பாதையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, இரு இடங்களில் சிறு அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று காலை, 9:30 மணிக்கு, ஒரு பொக்லைனுடன் வந்து, சாலை சீரமைப்பு பணியை தொடங்கினர். இப்பணியை தாமதமாக தொடங்கியதால், அச்சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏற்கனவே ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் குப்பனுார் சாலையிலும் போக்குவரத்து தடைபட்டதால் தான், மாணவர்கள், மக்கள், சேலம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ரூ.500 வசூல்

பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அத்யாவசிய தேவைக்கு ஏற்காட்டில் இருந்து சேலம் செல்ல வேண்டி இருந்தவர்கள், அங்குள்ள வாடகை வாகனங்களில் ஒருவருக்கு, 300 முதல், 500 ரூபாய் வரை கொடுத்து சேலம் சென்றனர்.தொடர் மழையால் கடந்த, 30 முதல், ஏற்காட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று வரை மின்சார சீரமைப்பு பணி நிறைவடையவில்லை. இதனால் ஏற்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 4ம் நாளாக நேற்றும் மின்சாரமின்றி மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகினர். நேற்று இரவு, 7:00 மணிக்கு, ஒண்டிகடை பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏற்காடு டவுன், கிராமப்புறங்களில், மின்சாரம் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது. மின்சாரம் இல்லாததால், மொபைல் போனுக்கு, 'சார்ஜ்' போடவே, மக்கள் அலைமோதினர். ஏற்காடு டவுனில் ஜெனரேட்டர் பயன்படுத்தும் உணவகம், தங்கும் விடுதிகளில், 'சார்ஜ்' போட்டு நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ