பஸ்களில் பட்டாசு எடுத்துச்சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
சேலம், ''வரும், 20ல் தீபாவளியை முன்னிட்டு, பஸ்களில் பட்டாசு எடுத்துச்சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சேலம் கோட்ட போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் குணசேகரன் எச்சரித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் பயணிக்கும் சிலர், பட்டாசுகளை கொண்டு வருவர். இதை கண்காணிக்கும் பணியில், பஸ் ஸ்டாண்டில் நேர கண்காணிப்பாளர், டிக்கெட் பரிசோதகர்கள் ஈடுபடுவர். பஸ்சில் ஏறும் பயணியரின் உடைமைகளை கண்காணிக்க, கண்டக்டருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாராவது பட்டாசு கொண்டு வந்தால் அவற்றை பறிமுதல் செய்து, போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைக்க கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்து பணிமனை, அலுவலகங்களுக்கு யாரும் பட்டாசு கொண்டு வந்தால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.