பூங்கா பணி தொடங்க பாப்பான் ஏரி அளவீடு
வாழப்பாடி: வாழப்பாடி, காளியம்மன் நகரில், 12.16 ஹெக்டேரில் உள்ள பாப்பான் ஏரியை சீரமைத்து பூங்காவாக மாற்ற, மத்திய அரசின், 'அம்ரூத் 2.0' திட்டத்தில், டவுன் பஞ்சாயத்து பொது நிதி, 88 லட்சம் ரூபாய் உள்பட, மத்திய, மாநில அரசுகள் மூலம் கூட்டு நிதி, 1.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து ஏரியை சீரமைத்து பூங்கா அமைக்கும் கட்டுமான பணி தொடக்க விழா, கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது. பின் மழையால் பாப்பான் ஏரி நிரம்பியது. இதனால் சீரமைப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, ஏரியில் தண்ணீர் வடிந்ததால், நேற்று வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகா-ரிகள், பாப்பான் ஏரி பரப்பளவை, 'டிஜிட்டல் மீட்டர்' மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுற்றுச்சுவர், பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.