நீர்வரத்து 1.08 லட்சம் கனஅடியாக உயர்வு இன்று நிரம்பும் தருவாயில் மேட்டூர் அணை
மேட்டூர், நீர்வரத்து, 1.08 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில், 5ம் முறையாக இன்று, மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு, 1.25 லட்சம் கனஅடி உபரிநீர், காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. இந்த நீர் வந்தடைந்ததால், அதற்கேற்ப மேட்டூர் அணை நீர்இருப்பு படிப்படியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, வினாடிக்கு, 7,382 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, இரவு, 8:00 மணிக்கு, 20,338 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நேற்று காலை, 8:00 மணிக்கு, 36,242 கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு, 8:00 மணிக்கு, 1.08 லட்சம் கன அடியாக அதிகரித்தது.கடந்த இரு நாட்களாக அணையில் இருந்து, 16 கண் மதகு, மின் நிலையங்கள் வழியே மொத்தம், 70,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.திறப்பை விட வரத்து கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, 117.46 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று இரவு, 8:00 மணிக்கு, 119.02 அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று முன்தினம் இரவு, 89.47 டி.எம்.சி.,யாக இருந்த அணை நீர்இருப்பு, நேற்று இரவு, 91.91 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணை நிரம்ப இன்னும், 1.5 டி.எம்.சி., மட்டுமே தேவை என்பதால், நடப்பாண்டில், 5ம் முறையாக இன்று மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன், 29, ஜூலையில், 5, 20, 25ல், மேட்டூர் அணை நிரம்பியிருந்தது.நேற்று இரவு, 10:00 மணி முதல், 48,700 கன அடி உபரி நீரும், 21,300 கன அடி நீர் பாசனத்துக்கும் என, மொத்தம், 70,000 கன அடியாக, நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.