அதிக பணம் கேட்டு நிதி நிறுவனம் மிரட்டுவதாக 2 பெண் குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
சேலம், சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்த, மணிகண்டன் மனைவி சந்தியா, 27. இவர் இரு பெண் குழந்தைகளுடன், நேற்று மதியம் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் நின்று, கேனில் எடுத்து வந்த பெட்ரோலை, அவரது உடலில் ஊற்ற முயன்றார். பாதுகாப்பு பணி போலீசார் தடுத்து, பெட்ரோல் கேனை பறித்து பெண்ணிடம் விசாரித்தனர்.அப்போது அவர் கூறியதாவது:நான் வசிக்கும் வீடு, காய்கறி கடையை, மணிகண்டன், தனியார் நிதி நிறுவனத்தில் எழுதி கொடுத்து, 40 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். கடந்த ஆண்டு கணவர் பிரிந்து சென்றார். கடன் தொகையில் அசல், வட்டி என, 26 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளேன். இன்னும், 41 லட்சம் ரூபாய், நிதி நிறுவனத்தினர் கேட்டனர். அதற்கு ஒப்புக்கொண்டு, 'என் பெயருக்கு பத்திரம் எழுதி கொடுக்க வேண்டும்' என கேட்டபோது, நிதி நிறுவனத்தினர் மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்தனர். சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன், துணை கமிஷனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், தற்கொலைக்கு முயன்றேன். மாவட்ட நிர்வாகம் விசாரித்து, வீட்டை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.போலீசார், அப்பெண்ணை டவுன் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று தொடர்ந்து விசாரிக்கின்றனர்.'பொய் சொல்லி நாடகம்'இதுகுறித்து, நிதி நிறுவனம் நடத்தும் முத்துக்குமார் கூறுகையில், ''மணிகண்டன், என்னிடம் வீட்டை எழுதி கொடுத்துவிட்டார். சந்தியா, அவர் பெயருக்கு வீட்டை மாற்றி தருமாறு கேட்டார். நான் வீட்டின் மதிப்பான, 60 லட்சம் ரூபாயை தந்தால் மாற்றி தருவதாக கூறினேன். முன்பணம், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு, மீதி வங்கி மூலம் கடன் பெற்று தருவதாகவும், வீட்டு பத்திரத்தை மாற்றித்தரும்படியும், அப்பெண் கேட்டார். பணம் தந்ததும் மாற்றித்தருவதாக தெரிவித்தேன். ஆனால் தற்போது பொய் சொல்லி நாடகமாடுகிறார்,'' என்றார்.