சொந்த கட்டடத்துக்கு மாறும் அருங்காட்சியகம்
சேலம்:சேலம் அரசு அருங்காட்சியகத்துக்கு நிரந்தர கட்டடம் இல்லை. இதனால் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக பக்கத்தில், அரசுக்கு சொந்தமான, 5,200 சதுரடியில், 4.9 கோடி ரூபாய் மதிப்பில், இரு தளங்களுடன், பல்வேறு வசதிகளுடன் பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது கட்டி ஓராண்டுக்கும் மேலான நிலையில், சில நாட்களாக சாரதா கல்லுாரி சாலையில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து, பழமையான கற்சிலைகள், கல்வெட்டு, மரச்சிற்பங்கள், முதுமக்கள் தாழி, ஓவியம், கலைப்பொருட்கள், 'டைனோசர்' மாதிரி சிற்பம், பழைய மரத்தேர் உள்பட, சேகரிப்பில் உள்ள அனைத்து பொருட்களும், சொந்த கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யும் பணியை, பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதனால் விரைவில், சொந்த கட்டடத்தில் அருங்காட்சியகம் செயல்பட உள்ளது.