21ல் சவுடேஸ்வரி கோவில் கும்பாபிேஷகம்மேட்டூர், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் அறக்கட்டளை, தேவாங்க குல மக்கள், திருக்கோவில் திருப்பணி கமிட்டி சார்பில், அரசு மருத்துவமனை பின்புறம், ஆஸ்பத்திரி காலனியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. அதன் கும்பாபிேஷகம், வரும், 21 காலை, 8:30 மணிக்கு மேல், 9:30 மணிக்குள் நடக்க உள்ளது. இதனால் நாளை காலை, 7:00 மணிக்கு மேல், காவிரியாற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு செல்ல உள்ளனர்.அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் 24வது குருபூஜைசேலம், சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில், 24வது குருபூஜை விழா நேற்று நடந்தது. அதிகாலை, 4:30 மணி முதல் திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி வேள்வியுடன் குருபூஜை தொடங்கியது. 7:30 மணி முதல், ஞான விநாயகர், ஞான முருகர், அப்பா பைத்தியம் சுவாமி ஆகியோருக்கு, பல்வேறு நறுமண பொருட்களால் மகா அபி ேஷகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்றார். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.புகையிலை விற்றமளிகை கடைக்கு 'சீல்'மேட்டூர், தங்கமாபுரிபட்டணம், அண்ணா நகரில் முகமது ெஷரீப், 30, என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். அவரது கடையில் சில வாரங்களுக்கு முன் புகையிலையை பறிமுதல் செய்த கருமலைக்கூடல் போலீசார், முகமது ெஷரீப் மீது வழக்கு பதிந்தனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அறிவுரைப்படி நேற்று, உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பு பழனி, போலீஸ் பாதுகாப்புடன், புகையிலை விற்ற மளிகை கடைக்கு, 'சீல்' வைத்தார். மேலும் மேட்டூர் ஆர்.எஸ்., பகுதியில் உள்ள டீக்கடையில் கலப்பட டீத்துாள் பயன்படுத்துவது தெரிந்ததால், அதன் உரிமையாளருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.புத்தர் சிலை பீடம் சேதம்பவுத்த சங்கம் ஆர்ப்பாட்டம்சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், 1960ல், தியான நிலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் புத்தர் சிலை, பீடத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்திய பின் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள், சிலையின் மேற்கூரை, துாண்கள், பீட பகுதியை சேதப்படுத்தியுள்ளனர்.இதனால் ஆத்துார் பவுத்த சங்க நிர்வாகிகள் சார்பில் அச்சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்., கவுன்சிலர் தேவேந்திரன் தலைமை வகித்தார். அதில் பவுத்த மத நிர்வாகிகள், சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; புத்தர் சிலையை சீரமைப்பு செய்ய வேண்டும் என, சிறிது நேரம் கோஷம் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.காளைகள் அதிகம்: எருதாட்டம் நிறுத்தம்பொங்கல் விழாவையொட்டி பனமரத்துப்பட்டி அடுத்த கம்மாளப்பட்டி ஊராட்சி மல்லிமுடக்கில் எருதாட்டம் நேற்று காலை தொடங்கியது. அதில் காளையர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மதியம் வெளியூரில் இருந்து, 100க்கும் மேற்பட்ட காளைகளை, வாகனங்களில் ஏற்றி கொண்டுவந்தனர். இதை கவனித்த பனமரத்துப்பட்டி போலீசார், பார்வையாளர்கள், வீரர்கள் பாதுகாப்பு கருதி எருதாட்டத்தை நிறுத்த அறிவுறுத்தினர். அதையேற்று விழா குழுவினரும் நிறுத்தி, எருதாட்டத்தை நிறைவு செய்தனர்.அரசு கலை கல்லுாரியில்இன்று ஓட்டப்பந்தயம்மேட்டூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணிகிரி மாவட்டங்களை சேர்ந்த, 250 மாணவ, மாணவியர் பங்கேற்கும், 10 கி.மீ., ஓட்டப்பந்தயம் இன்று காலை, 7:00 மணிக்கு தொடங்குகிறது. மாணவர்கள், 150 பேர், மாணவியர், 100 பேர் பங்கேற்கும் பந்தயத்தை, பெரியார் பல்கலை உடல்கல்வி இயக்குனர் வெங்கடாசலம் தொடங்கி வைக்கிறார். கல்லுாரியில் தொடங்கும் போட்டி, தொட்டில்பட்டி, சேலம் கேம்ப், தங்கமாபுரிபட்டணம், இடைப்பாடி சாலை பிரிவு வழியே மீண்டும் கல்லுாரி வளாகத்தை அடைகிறது. இதில் வெற்றி பெற்று முதல், 6 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர், தேசிய போட்டிக்கு தகுதி பெறுவர் என, பெரியார் பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பைக்கில் சென்றபோதுதடுமாறி விழுந்தவர் பலிமேச்சேரி, தொப்பூர் அருகே கம்மம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார், 28. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, ஹெல்மெட் அணியாமல், 'பேஷன்' பைக்கை ஓட்டிச்சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார்.வாய்க்காலில் விழுந்து'குடி'மகன் சாவுகொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டியை சேர்ந்த வெள்ளையன் மகன் வடிவேல், 35. திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் இறந்த நிலையில், கூலி வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி குடித்தார். நேற்று காலை சடையம்பாளையம் அருகே பால தடுப்புச்சுவர் மீது அமர்ந்திருந்த அவர், அங்கிருந்து விழுந்ததில் அதையொட்டி உள்ள சிறு வாய்க்காலில் இறந்து கிடந்தார். கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.வழிவிட மறுப்பால் ஆத்திரம்பஸ் கண்ணாடி உடைப்புசேலம், செட்டிச்சாவடி, அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வம், 28. நேற்று காலை, அப்பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது வழிவிடாமல் தனியார் பள்ளி பஸ் முன்புறம் சென்றுகொண்டிருந்தது. செல்வம் ஹாரன் அடித்தும், பஸ் டிரைவர் வழிவிடாமல் தொடர்ந்து சென்றார். இதில் ஆத்திரமடைந்த செல்வம் பஸ்சை முந்தவே, பஸ் பைக்கில் உரசியது. இதில் பஸ் டிரைவர், செல்வம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வம், பஸ் கண்ணாடியை உடைத்தார். இதையடுத்து அங்கு வந்த கன்னங்குறிச்சி போலீசார் செல்வத்திடம் விசாரிக்கின்றனர்.வழிப்பறியில் ஈடுபட்ட2 பேருக்கு 'காப்பு'சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் சசிகுமார், 30. தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, அம்மாபேட்டை டவுன் ஷிப் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு வந்த பொன்னம்மாபேட்டை, வடக்கு ரயில்வே காலனியை சேர்ந்த சூர்யா, 21, கத்தியை காட்டி மிரட்டி, சசிகுமாரிடம், 1,000 ரூபாயை பறித்துக்கொண்டார். இதுகுறித்து அவர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் சூர்யாவை கைது செய்து, பணத்தை மீட்டு கத்தியை பறிமுதல் செய்தனர்.அதேபோல் சேலம், மணக்காட்டை சேர்ந்த ஞானதுரை மனைவி ரோஸ்லீன், 41. இவரிடம், நேற்று முன்தினம் கத்தியை காட்டி மிரட்டி, 1,000 ரூபாயை பறித்த, ஜான்சன்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன், 30, என்பவரை, அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்தனர்.மன நலம் பாதிக்கப்பட்டமுதியவர் மாயம் சேலம், கிச்சிப்பாளையம், ஆசாரிக்காட்டை சேர்ந்தவர் ஜாய்போன், 85. மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு உறவினர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 15 மாலை, 4:00 மணிக்கு, வெளியே சென்ற ஜாய்போன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர் அயூப்கான், வுன் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதனால் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.கூலித்தொழிலாளி மர்மச்சாவுஆத்துார் அருகே துலுக்கனுார் ஊராட்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி, 59. கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு இயற்கை உபாதைக்கு ஆண்டிக்காடு மைதான பகுதிக்கு சென்றார். ஒரு மணி நேரமாகியும் வராததால், அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தனர். அப்போது தலையில் அடிபட்ட நிலையில் சின்னசாமி ரத்த காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார், அவரது மர்மச்சாவு குறித்து விசாரிக்கின்றனர்.ம.சாவடியில் ஊர் பெயர் பலகை தேவைசேலம் - கோவை பைபாஸ் சாலையையொட்டி உள்ள மகுடஞ்சாவடியில் முருகன், அய்யப்பன் கோவில்கள், பத்திரப்பதிவு அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை உள்ளன. இடைப்பாடி பிரதான சாலையும் உள்ளது. ஆனால் மகுடஞ்சாவடிக்கு நெடுஞ்சாலை அருகே பெயர் பலகை இல்லை. இதனால் நெடுஞ்சாலையில் பயணிக்கும் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள், மகுடஞ்சாவடியை கடந்து பல கி.மீ., பயணித்து, மீண்டும் மகுடஞ்சாவடிக்கு வரும் நிலை உள்ளது. குறிப்பாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. அதனால் பைபாஸ் சாலை அருகே ஊர் பெயர் பலகை வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிசு விவகாரம்:மருத்துவ குழு விசாரணைசேலம் மாவட்டம் ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு, நேற்று முன்தினம் மாலை, அங்குள்ள முட்புதரில் உயிருடன் இருந்தது. இதை அறிந்து, ஆத்துார் ஆர்.டி.ஓ., ரமேஷ், தாசில்தார் வெங்கடேசன் வந்து, சிசுவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.நேற்று, சேலம் மருத்துவ குழுவினர், ஆத்துார் ஊரக போலீசார், ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் விசாரித்தனர்.இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறுகையில், 'தகாத உறவில் அல்லது திருமணம் செய்யாத பெண், குழந்தையை பெற்றிருக்கலாம். சிசுவை உரிய நேரத்தில் மீட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீசியவர் குறித்து விசாரிக்கப்படுகிறது' என்றனர்.வரும் 31ல் பேச்சுப்போட்டிமாணவர்களுக்கு அழைப்புசேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், வரும், 31ல் நடக்க உள்ள பேச்சுப்போட்டியில் பங்கேற்க, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை:பாவலரேறு பெருஞ்சித்திரனார், கவிஞர் தமிழ்நாடன், முருகுசுந்தரம் ஆகியோரின் தமிழ் இலக்கிய பணி, தமிழ் தொண்டு, தமிழ் மொழி பங்களிப்பை நினைவு கூறும்படி பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, சேலம் அரசு கலைக்கல்லுாரியில் வரும், 21 காலை, 9:30 மணிக்கு பேச்சுப்போட்டி நடக்க உள்ளது.பாவலரேறுவின் எழுத்துப்பணி, கவிஞர் தமிழ்நாடனின் படைப்பு, கவிஞர் முருகுசுந்தரமும் பாவேந்தரும் தலைப்புகளில் பள்ளி மாணவர்களுக்கும், தமிழ் தேசியத்தின் தந்தை, கவிஞர் தமிழ் நாடனின் இலக்கியம் மற்றும் கலைப்பயணம், கவிஞர் முருகுசுந்தரத்தின் கவிதை கோட்பாடுகள் தலைப்புகளில் கல்லுாரி மாணவர்களுக்கும் போட்டி நடக்க உள்ளன. முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாயுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தலைமை ஆசிரியர், கல்லுாரி முதல்வர் பரிந்துரையுடன் போட்டியில் பங்கேற்கலாம்.பிரதிஷ்டை தினத்தையொட்டிஊஞ்சலில் லட்சுமி நரசிம்மர்சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில் தனி சன்னதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் மூலவர் சிலை, தை மாத ரேவதி நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதையொட்டி ஆண்டுதோறும் தை ரேவதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. அதன்படி நடப்பாண்டில் நேற்று, மூலவர் லட்சுமி நரசிம்மர், உற்சவர் லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. மதியம் சர்வ அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மருக்கு மகா தீபாராதனை காட்டி பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் லட்சுமி நரசிம்மர், 'ரத்னங்கி' அணிந்து ஊஞ்சலில் அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.தை வெள்ளியான இன்று, பட்டைக்கோவில் வரதராஜர், அம்மாபேட்டை சவுந்தரராஜர், மன்னார்பாளையம் பிரிவு லட்சுமி நரசிம்மர், கிருஷ்ணர், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில், தாயாருடன் பெருமாள் சுவாமியை ஊஞ்சலில் எழுந்தருளச்செய்து சேர்த்தி சேவையில் அருள்பாலிக்கிறார்.தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில்16வது ஆண்டு விழா கொண்டாட்டம்மல்லுார் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில், 16வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னதாக துணை முதல்வர் சதீஷ்குமார் வரவேற்றார். முதல்வர் சரவணன், ஆண்டறிக்கை வாசித்தார். செயலர் செந்தில்குமார், பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். உளவியல் வாழ்க்கைத்திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் கார்த்திக்வேலு, மாணவர்களுக்கு வாழ்க்கை தத்துவங்கள் குறித்து விளக்கம் அளித்து பெற்றோர், ஆசிரியர், தோழர்களிடம் எவ்வாறு பழகுவது என, இன்றைய சூழலுக்கேற்ப நகைச்சுவையுடன் பேசினார்.தொடர்ந்து கல்வி மட்டுமின்றி விளையாட்டு துறையிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். அதேபோல் சிறந்த முறையில் பங்களிப்பை வெளிப்படுத்திய பேராசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இதில் கல்லுாரி இயக்குனர்கள், மாணவ, மாணவியரை பாராட்டினர். இதையடுத்து மாணவ, மாணவியரின் கலை, நடனம், நாடகம், சிலம்பம், யோகா, பிரமிடு, தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கணினி துறைத்தலைவர் மோகனப்ரியா, மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர், பகுதி நேர மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.