மின் கட்டணம் உயர்வு செவிலியை தர்ணா
சேலம்: சேலம் மாவட்டம் தளவாய்பட்டி, நடைய கவுண்டனுாரை சேர்ந்த, கூலித்தொழிலாளி தானப்பன் மனைவி புனிதவள்ளி, 38. தனியார் மருத்துவமனையில் செவிலியையாக பணிபுரிகிறார். இவர் நேற்று, புது ரோடு சுந்தர் நகரில் உள்ள மின் பகிர்மான அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதுகுறித்து புனிதவள்ளி கூறியதாவது: என் வீட்டுக்கு சராசரியாக, 1,500 ரூபாய் மின் கட்டணம் வரும். இம்முறை, 7,500 ரூபாய் வந்துள்ளது. இதுகுறித்து மின் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாறாக கட்ட தவறினால், இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் மிரட்டுகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து வாரிய அதிகாரிகள் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தினர். பின் அவர், போராட்டத்தை கைவிட்டார்.