ஓடை ஆக்கிரமிப்பு? கட்டட பணி நிறுத்தம்
ஏற்காடு: ஏற்காடு, லேடீஸ் சீட் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், முருகன் நகர் ஓடை வழியே ஜெரீனாக்காடு, எம்.ஜி.ஆர்., நகரை கடந்து, படகு இல்ல ஏரியில் கலக்கிறது. இதில் முருகன் நகர் ஓடை அருகே, தனியாருக்கு சொந்தமான நிலத்தை, அதன் உரிமையாளர் சீரமைத்து வருகிறார். இதில், ஓடையை ஆக்கிரமித்து கட்டட பணி மேற்கொள்வதாக, அப்பகுதி மக்கள், ஏற்காடு தாசில்தார் ரமேஷ்குமாரிடம் நேற்று புகார் அளித்தனர். தொடர்ந்து தாசில்தார், நில அளவை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது ஓடையை ஆக்கிரமிப்பது உறுதியானது. இதனால், நில உரிமையாளரை தொடர்பு கொண்டபோது, அவர் சென்னையில் இருப்பதாக கூறினார். தொடர்ந்து இரு நாட்களுக்குள் நேரில் வர வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதுவரை அங்கு வேலையை நிறுத்த உத்தரவிட்டார்.