அபராதமின்றி பதிவு செய்ய வாய்ப்பு இ.எஸ்.ஐ., விழிப்புணர்வில் தகவல்
சேலம், சேலம் மாவட்டத்தில், இ.எஸ்.ஐ., சார்பில், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான சிறப்பு திட்டம் -- 2025(எஸ்.பி.ஆர்.இ.இ.,) குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சேலம் கிளை அலுவலக மேலாளர் ஜெனோவா வரவற்றார். இ.எஸ்.ஐ., சேலம் துணை மண்டல இயக்குனர் சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து பேசியதாவது:அனைத்து நிறுவனங்களும், இ.எஸ்.ஐ.,யின் கீழ் பதிவு செய்து கொள்வதை ஊக்குவிக்க, சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாமைக்கான எந்த சந்தா தொகையும், அபராதமும் இன்றி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியான தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு பலன்களை விரிவுபடுத்தல், பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து எழும் பல்வேறு பொறுப்புகள், சட்ட நடவடிக்கைகளிலிருந்து நிறுவனங்களை பாதுகாப்பது ஆகியவை, இத்திட்ட நோக்கம். ஜூலை முதல், டிசம்பர் வரை அமலில் இருக்கும்.இதன்மூலம் சேலம் மாவட்டத்தில், 79,295 ஊழியர்கள், 3.17 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இ.எஸ்.ஐ., திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத நிறுவனங்கள், இந்த சிறப்பு திட்டத்தில், விரைவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சேலம் உற்பத்தி திறன் குழு தலைவர் இளங்கோவன், துணை தலைவர் பூபாலன், 152 நிறுவன உரிமையாளர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.