பணம் இரட்டிப்பாக தருவதாக மோசடி கமிஷனரிடம் புகார் அளிக்க குவிந்த மக்கள்
சேலம், சேலத்தை சேர்ந்தவர் அளித்த நம்பிக்கையால், ஆன்லைனில் பலர் முதலீடு செலுத்திய நிலையில், இரு நாட்களாக பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட மக்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க குவிந்தனர்.சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 55. இவர், 'புனேவில் மார்க்கெட் மாஸ்டர் கம்பெனி உள்ளது. அந்த நிறுவன, 'ஆப்'பில் பணம் செலுத்தினால், ஒரே மாதத்தில் இரட்டிப்பாக தரப்படும்' என விளம்பரப்படுத்தியுள்ளார். இதுகுறித்து, அறிமுக கூட்டத்தையும் நடத்தினார்.இதை நம்பி, குகை, கருங்கல்பட்டி, செவ்வாய்ப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள், 'ஆப்' மூலம் பணத்தை முதலீடு செய்தனர். முதலில் இரட்டிப்பாக பணம் பெற்றதால், பலரும், 20 லட்சம் ரூபாய் வரை செலுத்தினர். ஆனால் இரு நாட்களாக, அந்த, 'ஆப்'பில் பணம் எடுக்க முடியவில்லை. அதிர்ச்சி அடைந்த பலரும், சுரேஷ்குமாரின் வீட்டுக்கு சென்று கேட்டனர். அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்டோர், நேற்று, சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க திரண்டனர். அதேநேரம் சுரேஷ்குமாரும், தான் ஏமாற்றப்பட்டதாக மனு அளிக்க, அங்கு வந்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின் சுரேஷ்குமாரை அழைத்து சென்று போலீசார் விசாரிக்கின்றனர். இதில் பல கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாக தெரியவந்துள்ளதால், தொடர்ந்து விசாரணை நடக்கிறது.