ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி
ஆத்துார், ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியதால் உற்சாக குளியல் போட்டனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி யில் முட்டல் மலை கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. இங்குள்ள முட்டல் ஏரி, பூங்கா மற்றும் ஆணைவாரி நீர் வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.நேற்று முன்தினம், கல்வராயன்மலை பகுதியில், கன மழை பெய்து வந்ததால், ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், ஏரி மற்றும் பூங்கா பகுதிக்கு செல்வதற்கும் வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். நேற்று, ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து சீராக இருந்ததால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதியளித்தனர்.தீபாவளி பண்டிகையையொட்டி, சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் உற்சாக குளியல் போட்டு, பூங்கா பகுதியை ரசித்து சென்றனர். வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.