| ADDED : ஜூலை 12, 2024 07:22 AM
தலைவாசல்: தலைவாசல் அருகே காட்டுக்கோட்டையில் சேகோ ஆலை கட்டுவதற்கு தனியார் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதனால், 2022ல் சேலம் மாவட்ட வேளாண் இயக்குனர் மூலம் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை ரத்து செய்ய, அப்பகுதி விவசாயிகள், மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து காட்டுக்கோட்டை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றினர். சில நாட்களுக்கு முன், தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். நேற்று முன்தினம், சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் தலைமையில் வேளாண் அலுவலர்கள், ஆய்வு பணிக்கு வந்தனர். அப்போது இணை இயக்குனரை, அப்பகுதி விவசாயிகள், மக்கள் சூழ்ந்து வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சேகோ ஆலைக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். சிங்காரம், 'விவசாயிகளுக்கு இடர்பாடு ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தார். பின் விவசாயிகள், மக்கள் கலைந்து சென்றனர்.