புரட்டாசி பவுர்ணமி கிரிவலம் நாளை முதல் 200 பஸ்கள் இயக்கம்
சேலம்: புரட்டாசி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை முதல், 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வசதியாக, நாளை (16ம் தேதி), நாளை மறுநாள் (17ம் தேதி), 200 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக சேலம், ஆத்துார், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை மதியம், 2:00 மணி முதல் 17 மதியம், 2:00 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும், www.tnstc.inஎன்ற இணையதளம் வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே, பயணிகள் பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்திட வேண்டும். இத்தகவலை, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.