உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கு.க., செய்த பெண் பலி இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

கு.க., செய்த பெண் பலி இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

சேலம், நவ. 21-குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்ட பெண் பலியானதால், உடலை வாங்க மறுத்த உறவினர்கள், இழப்பீடு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே பனைமடல், காமராஜர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செல்லம், 35. இவருக்கு ஆத்துார் அரசு மருத்துவமனையில் கடந்த, 14ல் ஆண் குழந்தை பிறந்தது. 17ல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் உடல்நிலை மோசமாக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.உடலை வாங்கிக்கொள்ள, அவர்களது உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதில் நேற்று காலை, சேலம் அரசு மருத்துவமனை முன், போலீசாருக்கும் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செல்லத்தின் குடும்பத்துக்கு இழப்பீடு, முருகனுக்கு அரசு வேலை கேட்டு, செல்லத்தின் பெற்றோர், உறவினர்கள், கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி உள்ளிட்ட போலீசார், பேச்சு நடத்தியும் பலனில்லை. இதனால் உறவினர்கள், கலெக்டரை சந்திக்க முயன்றபோது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டோருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் போலீசார், சிலரை மட்டும் சந்திக்க அனுமதி அளித்தனர். பின் மனுவை, கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் வழங்கி பேச்சு நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து உறவினர்கள் கூறியதாவது:ஆத்துார் அரசு மருத்துவமனையில், செல்லத்துக்கு குழந்தை பிறந்த ஓரிரு நாளில் அவரது கணவரிடம் ஒப்புதல் கையெழுத்து கூட வாங்காமல் அவசரமாக குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் அதிகளவில் ரத்தம் வெளியேறி இறந்துள்ளார். மருத்துவரின் தவறான சிகிச்சை முறையே இறப்புக்கு காரணம். தாயை இழந்து வாடும் குடும்பத்தில் குழந்தைகள் படிப்பு செலவுக்கு, 20 லட்சம் ரூபாய், தனியார் டிரைவராக பணிபுரியும் முருகனுக்கு அரசு வேலை, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை