| ADDED : மே 09, 2024 06:47 AM
ஓமலுார் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஒரு பிரிவினர் வழிபட, மற்ற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த, 2ல் கலவரம் ஏற்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பிலும், 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அதேநேரம், 6ம் நாளாக நேற்றும், தீவட்டிப்பட்டியின் பல்வேறு இடங்களில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, போலீசாரால் வைக்கப்பட்ட கேமரா பராமரிப்பின்றி இருந்ததால், கலவரத்தின்போது நடந்த சம்பவங்களை காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நேற்று ஆய்வு செய்த போலீசார், தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப், ஆட்டோ ஸ்டாண்ட், தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே, காடையாம்பட்டி பிரதான சாலை, மாரியம்மன் கோவில் அருகே என முதல்கட்டமாக, 10 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த, இடங்களை தேர்வு செய்தனர். ஓரிரு நாட்களில் கேமரா பொருத்தப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.