2ம் நாளாக சாலை மறியல் 160 ஆசிரியர்கள் கைது
சேலம், தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். அதில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல்; 50 ஆண்டுக்கு மேலாக நடைமுறையில் இருந்த உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் என்பன உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், 62 பெண்கள் உள்பட, 160 பேரை கைது செய்தனர்.இதேபோல் நேற்று முன்தினம் நடந்த மறியலில், 140 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக, சேலம் டவுன் வி.ஏ.ஓ., மோகன்ராஜ் புகார்படி, சேலம் டவுன் போலீசார், 140 பேர் மீதும் வழக்குப்பதிந்தனர்.