சேலம்: 'பண்டிகை சீஸன் காரணமாக நூல்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது' என, தென்னிந்திய பஞ்சாலைகளின் (சைமா) தலைவர் தினகரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் தினகரன் விடுத்துள்ள அறிக்கை:பருத்தியை நம்பியுள்ள பஞ்சாலைகளில் நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் இருந்தே சந்தை நெருக்கடி காரணமாக நூல் தேங்கி, 500 மில்லியன் கிலோவாக மில்களில் தங்கி விட்டது. இது சாதாரணமாக, 100 மில்லியன் கிலோ அளவே இருக்கும்.இதற்கு முக்கிய காரணம் நூல் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல், 2011 மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தியதே காரணம். இந்திய பஞ்சாலைகள் தனது உற்பத்தியில், 23 சதவீதத்தை, அதாவது, 55 முதல், 70 மில்லியன் கிலோ அளவுக்கு ஒவ்வொறு மாதமும் ஏற்றுமதி செய்கிறது.நூல் ஏற்றுமதிக்கான தடையின் காரணமாக இந்த நூல் பஞ்சாலைகளில் தங்கி விட்டது. ஆயிரக்கணக்கான சாய ஆலைகள் தமிழகத்தில் மூடப்பட்டதாலும், பஞ்சு விலை ஏற்றத்தின் காரணமாகவும், இந்திய, பன்னாட்டு சந்தைகளில் ஏற்பட்ட சுணக்க நிலையினாலும், நூல் தேக்க நிலை மேலும் அதிகரித்தது.வரலாற்றிலேயே முதன் முறையாக பஞ்சாலைகள், 20 முதல், 40 சதவீதம் நூல் உற்பத்தியை கடந்த மே 24 முதல் குறைத்தது.பஞ்சாலைகளில் தற்போது தேங்கிய நூல் குறைய ஆரம்பித்து சாதாரண நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறது. சில பஞ்சாலைகளில் தேங்கிய நூல் சாதாரண அளவை விட குறைந்தே காணப்படுகிறது. இது நூலுக்கான தேவை அதிகரித்துள்ளதை காட்டுகிறது.பண்டிகை காலம் நெருங்குவதால் ஆர்டர்கள் குவிந்து வருகிறது. உலக அளவிலும் இது போன்ற நிலை உருவாகி உள்ளது. சேலம், திருப்பூர் நூல் மார்க்கெட்டுகளில் நூல் விலை கிலோவுக்கு சராசரியாக ஐந்து ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.உதாரணமாக, 40ம் நம்பர் கோம்புடு வார்ப் நூலின் விலை கிலோ, 185 ரூபாயிலிருந்து, 190 ரூபாயாகவும், 30ம் நம்பர் கோம்புடு ஓசைரி கிலோ, 179 ரூபாயிலிருந்து, 184 ரூபாயாகவும், 40ம் நம்பர் கோம்புடு ஓசைரி கிலோ, 190 ரூபாயிலிருந்து, 197 ரூபாயாகவும், உயர்ந்துள்ளது.மேலும் செப்டம்பர் 1ம் தேதியை கணக்கில் கொண்டு பார்க்கும் போது, மும்பை மார்க்கெட்டிலும் நூலின் விலை கிலோவுக்கு, 10 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இதில் 64ம் நம்பர் கோம்புடு வார்ப் நூல் கிலோ, 205 ரூபாயிலிருந்து, 225 ரூபாயாகவும், 40ம் நம்பர் கோம்புடு வார்ப் நூல் கிலோ, 170 ரூபாயிலிருந்து, 190 ரூபாயாகவும், 92ம் நம்பர் கோம்புடு வார்ப் நூல் கிலோ, 240 ரூபாயிலிருந்து, 260 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.ஐரோப்பிய நாடுகளிலுள்ள நூல் சந்தைகளிலும் நூல் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. 20 நாளில், 40ம் நம்பர் கோம்புடு ஓசைரி நூல் கிலோ, 3.90 அமெரிக்க டாலரிலிருந்து, 4.25 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.பைன், சூப்பர் பைன் நூல் விற்பனையில் பஞ்சாலைகள் கிலோவுக்கு, 38 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளன. இந்த நஷ்டத்தின் அளவு தற்போது, 18 ரூபாயிலிருந்து, 25 ரூபாயாக குறைந்துள்ளது.பண்டிகை காலம் நெருங்குவதால் இந்த நிலைமை மேலும் சீராக வாய்ப்பு உள்ளது. திருப்பூர் சந்தையில் இதுவரை ரொக்க தள்ளுபடி, மொத்த தள்ளுபடி அளித்து வந்த பஞ்சாலைகள் தற்போது அதை அறவே நிறுத்தி விட்டன. நூலின் விலையும் கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பஞ்சு விலையும் உயர்ந்த வண்ணமே உள்ளது. சமீப காலத்தில் கண்டி ஒன்றுக்கு, 35 ஆயிரம் ரூபாயாக இருந்த பஞ்சின் விலை, தற்போது, 42 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.தற்போதைய சந்தை நிலவரம் பஞ்சாலைகளுக்கு ஊக்குவிப்பதாக இருந்தாலும், இப்போதைய பஞ்சின் விலையை கணக்கில் கொண்டால், நூல்களின் விலை இன்னும் கட்டுப்படியாகாத நிலையில் தான் உள்ளது.அக்டோபர் மாதம் முதல் சந்தை நிலவரம் சரியாக வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு பஞ்சாலைகளை காக்கும் பொருட்டு, நடப்பு மூலதனக் கடனை நீண்ட கால கடனாக மாற்றவும், கடன், வட்டியை திரும்ப செலுத்த இரண்டாண்டு கால அவகாசம் அளித்தும் நடவடிக்கைகள் எடுத்தால் பஞ்சாலைகள் இழப்பிலிருந்து மீண்டு லாபத்தை அடைய முடியும்.பஞ்சாலைகள் பருத்தியின் விளைச்சல் காலத்தில் தாமாக பஞ்சு வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்க முன் வரவேண்டும்.