2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை அவசியம்
சேலம், சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் கவிதா அறிக்கை:விதைகள் நல்ல தரத்துடன் இருந்தால் மட்டுமே உற்பத்தியில், 15 சதவீதம் கூடுதல் விளைச்சலுக்கு வழிவகுக்கும். தரமான விதைகள் என்பது இனத்துாய்மை, புறத்துாய்மை, முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதம் பெற்றிருக்க வேண்டும். விதை உற்பத்தியாளர்கள், விவசாயிகள், விதைகளை அதன் விதைப்பு காலம் வரும் வரை சேமித்து வைப்பது அவசியம். சேமிப்பின்போது ஈரப்பதம் மிகவும் அவசியம். சரியான ஈரப்பதம் உள்ள விதைகள் பூச்சி மற்றும் பூஞ்சான் தாக்குதல் இன்றி நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியும். ஒவ்வொரு பயிருக்கும் ஈரப்பத சதவீதம் மாறுபடும்.நெல் அதிகபட்ச ஈரப்பதம், 13 சதவீதம்; கம்பு, கேழ்வரகு அதிகபட்சம், 12 சதவீதம்; உளுந்து, பாசிப்பயிறு, நிலக்கடலை, எள், 9 சதவீதம் இருக்க வேண்டும். விதைகள் சேமிப்பின்போது சாக்குப்பைகள் புதிதாக இருக்க வேண்டும். மேலும் விதைகளின் முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதம் பரிசோதனை செய்ய, 2 மாதங்களுக்கு ஒரு முறை விதை மாதிரிகளை எடுத்து விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்யலாம். அதன் முடிவின்படி சில பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். கலெக்டர் அலுவலக அறை எண்: 403ல் இயங்கும் விதை பரிசோதனை நிலையத்தில், 80 ரூபாய் கட்டணத்துடன் விதை பரிசோதனை செய்து கொள்ளலாம்.