அணை குறுக்கே பாலம் கட்ட பரிசோதனைக்கு மண் எடுப்பு
மேட்டூர்: காவிரி குறுக்கே கோட்டையூர் - ஒட்டனுார் இடையே, மேம்-பாலம் கட்டுவதற்காக பரிசோதனைக்கு மண் எடுக்கும் பணி துவங்கியுள்ளது.சேலம், கொளத்துார் ஒன்றியம், காவேரிபுரம் ஊராட்சியில் கோட்டையூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் எல்லையில் காவிரியாறு மேட்டூர் அணையில் கலக்கிறது. நீர்மட்டம், 100 அடிக்கு மேல் உயரும் போது, அப்பகுதியில் அணை நீர் தேங்கி நிற்கும். தற்போது அணை நீர்மட்டம், 107.53 அடியாக உள்ளது. அணையின் மறுகரையில் தர்மபுரி மாவட்டம், பென்னா-கரம் வட்டத்தில், ஒட்டனுார் கிராமம் உள்ளது.இரு மாவட்டங்களில் உள்ள கோட்டையூர், ஒட்டனுார் கிரா-மத்தை இணைக்கும் வகையில் மேட்டூர் அணை குறுக்கே, 2 கி.மீ., துாரம் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்க இரு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் சட்டசபை தேர்தலின்போது வாக்குறுதி அளித்தனர்.அவர்கள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசும் பாலம் கட்ட ஆய்வு பணிக்கு கடந்த, 2022ல், 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்-தது. 2 கிலோ மீட்டர் துாரம் உயர்மட்ட பாலம் கட்ட, 250 கோடி ரூபாய் செலவாகும் என தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்-டது. பாலம் கட்ட முதல் கட்டமாக பரிசோதனைக்கு மண் எடுக்கும் பணி கடந்த, 11ல் துவங்கியது. கரையில் மண் எடுத்த நிலையில் நீர்பரப்பு பகுதியில் மண் எடுப்பதற்காக, நேற்று பேரல்களை கட்டி மிதவை அமைக்கும் பணி நடந்தது.