அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
சேலம் : புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி சேலம், பொன்னம்மாபேட்டை மன்னார்பாளையம் பிரிவில் உள்ள பிரித்யங்கிரா தேவி கோவிலில் சிறப்பு சத்ரு சம்ஹார யாகம் நேற்று நடந்தது. எதிரிகள் தொல்லை நீங்க, கண் திருஷ்டி விலக, உலக நன்மை வேண்டி நடந்த யாகத்தில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய, 108 கிலோ வர மிளகாய் பயன்படுத்தப்பட்டது. முடிவில் பக்தர்கள் கைகளாலேயே மிளகாய்களை யாக குண்டத்தில், வேண்டுதல்களை நிறைவேற சமர்ப்பித்தனர். தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜித்த புனிதநீரால் தேவிக்கு அபி ேஷகம் செய்யப்பட்டது. சர்வ அலங்காரத்தில் தேவிக்கு உச்சி வேளையில் தீபாராதனை காட்டி பூஜை செய்யப்பட்டது. பின் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலையில் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது. வெள்ளி கவசத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.சங்ககிரி, வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் விநாயகர், மாரியம்மன் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. சக்திமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆத்துார், கோட்டை சம்போடை வன பகுதியில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலில், காவிரியில் தண்ணீர் வரவேண்டும்; டெல்டா பகுதிகளில் பயிர்கள் செழிக்க வேண்டும்; மழை பெய்து வசிஷ்ட நதியில் தண்ணீர் வரவேண்டும் என, சிறப்பு வேள்வி யாகம் செய்தனர். தொடர்ந்து மூலவர் மதுரகாளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஆத்துார் வெள்ளை விநாயகர், கொத்தாம்பாடி முனீஸ்வரன், ஆறகளூர் காமநாதீஸ்வரர், அம்பாயிரம்மன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.காளிப்பட்டி கந்தசாமி கோவில் வண்ண மலர்மாலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை, 6:00 மணிக்கு கோ பூஜையுடன் விஸ்வரூப தரிசனம் முடிந்த பின் மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் கந்தசாமி சிறப்பு தங்க கவசத்தில் அலங்கார பந்தலில் எழுந்தருளினார். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.