சேலம் உள்பட 3 அரசு மருத்துவமனைகளில் அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம்
சேலம், சேலம் உள்பட மூன்று அரசு மருத்துவமனைகளில் தலா, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிநவீன ஸ்கேன் கருவியுடன் கூடிய, முழு உடல் பரிசோதனை மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசு குடும்ப நலம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில், சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளில் துல்லியமாகவும், விரைவாகவும் முழு உடல் பரிசோதனை செய்ய, அதிநவீன 'டெக்ஸா ஸ்கேன்' கருவியுடன் கூடிய மையங்கள் அமைக்க தலா, 20 லட்சம் ரூபாய் என மொத்தம், 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, துறையின் முதன்மை செயலர் செந்தில்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார்.சேலம் அரசு மருத்துவமனையில், விரைவில் அதிநவீன 'டெக்ஸா ஸ்கேன்' கருவியுடன் கூடிய முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்படும். இதில், தலை முதல் பாதம் வரை துல்லியமாகவும், விரைவாகவும் முழு உடல் பரிசோதனை செய்ய முடியும். மேலும் குறைந்த நேரத்தில், அதிக நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய முடியும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.