உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகரில் களைகட்டிய தேங்காய் சுடும் நிகழ்வு அமர்க்களமாக தொடங்கிய ஆடி மாதம்

மாநகரில் களைகட்டிய தேங்காய் சுடும் நிகழ்வு அமர்க்களமாக தொடங்கிய ஆடி மாதம்

சேலம், ஆடி மாதப்பிறப்பான நேற்று, சேலம் மக்கள் பாரம்பரியமாக தேங்காய் சுட்டு விநாயகருக்கு படைத்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.சேலம், நாமக்கல், ஈரோடு சுற்று வட்டார கொங்கு மண்டலத்தில், ஆடி மாதப்பிறப்பை ஆடி பண்டிகை என்ற பெயரில், பாரம்பரியமாக தேங்காய் சுட்டு விநாயகருக்கு படைத்து வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆடி மாதப்பிறப்பான நேற்று, சேலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்று கூடி, உருண்டையான புது தேங்காய்களை தேர்வு செய்து, அதன் குடுமியை அகற்றி நார்களை தரையில் தேய்த்து சுத்தம் செய்து கழுவினர். பின்னர் மூன்று கண்களில், ஒரு கண்ணில் துளையிட்டு தேங்காயில் பாதியளவு தண்ணீரை எடுத்து விட்டு, துளை வழியாக அவல், வெல்லம், எள், ஏலக்காய், அரிசி, பொட்டுக்கடலை கலந்த கலவை இட்டு, 'அழிஞ்சி' குச்சியால் துளையில் சொருகி, தண்ணீர் வெளியே வராதபடி அடைத்து மஞ்சள், குங்குமம் தடவி காய வைத்தனர்.பின் வீடுகளின் முன் திறந்த வெளியில் குச்சி, கட்டைகளை போட்டு தீ மூட்டி எரியும் நெருப்பில் குச்சியில் சொருகிய தேங்காயை பிடித்து சுட வைத்தனர். 10 நிமிடம் வரை உருட்டி உருட்டி அனைத்து பகுதிகளிலும் சமமாக தீ வாட்டும் வகையில் பிடித்து, ஒரு பக்குவம் வந்த பின் குச்சியில் இருந்து சுட்ட தேங்காயை தனியாக எடுத்து, தட்டில் வைத்து அருகிலுள்ள கோவிலுக்கு சென்று விநாயகருக்கு படைத்து பூஜை செய்தனர். பின், தேங்காயை உடைத்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி கொண்டாடினர்.இதுகுறித்து சேலம் மக்கள் கூறியதாவது; 'ஆடி மாதப்பிறப்பன்று தேங்காய் சுடும் வழக்கத்தை பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகிறோம். இதிகாசத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரத போர் ஆடி மாதப்பிறப்பன்று துவங்கி, 18 நாட்கள் நடந்ததாகவும், போர் துவக்க நாளில் பாண்டவர்கள் தேங்காயை தீயில் சுட்டு விநாயகருக்கு உடைத்து களப்பலி கொடுத்ததாக முன்னோர்கள் கூறியுள்ளனர். அதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஆடி மாதப்பிறப்பன்று காவிரி கரையோரங்களில், தேங்காய் சுடும் நிகழ்வு நடந்து வருகிறது. மற்ற ஊர்களில் மெல்ல மெல்ல இந்த வழக்கம் மறந்து போன நிலையில், சேலத்தில் மட்டும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினர்.* ஆத்துாரிலும், தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டது. புதிய தேங்காயை சுத்தம் செய்து, பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் கலந்த கலவையை இட்டு, நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சிமர குச்சியில், தேங்காயை உள்வைத்து, தீயில் வாட்டி சுட்டனர். தொடர்ந்து, விநாயகர் கோவிலில் வழிபட்டனர்.* ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, இடைப்பாடி பகுதிகளில் உள்ள கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசு மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெண்களும், குழந்தைகளும் தேங்காய் சுட்டு மகிழ்ந்து கொண்டாடினர்.தாரமங்கலத்தில் எருதாட்டம் ஜோர்தாரமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் ஆடி பிறப்பையொட்டி, விநாயகர் கோவிலில் பூஜை செய்து, செம்பு மாரியம்மன் கோவிலை சுற்றி வந்து எருதாட்டம் துவங்கியது. கோவில் வளாகத்தில் காளைகளை பிடித்து வீரர்கள் சுற்றி வந்தனர். 100க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்த போதும் சில இளைஞர்கள் ஒவ்வொரு காளையாக பிடித்து செல்லாமல் தாறுமாறாக ஓட்டியதால் காளைகள் அங்கும் இங்கும் ஓடியது. காளைகள் முட்டியதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை