சுரங்கப்பாதை மூழ்கியது; பிரதான சாலை ஆறாக மாறியது; கனமழையால் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் அவதி
சேலம்: கனமழையால் சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி சிவதாபுரம் ரயில்வே சுரங்கப்பாதையை மூழ்கடித்தது. அங்குள்ள சாலைகளில், 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். தவிர குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.சேலத்தில் சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு சேலம் மாநகர் முழுதும் கனமழை கொட்டியது. நேற்று காலை வரையாக, சேலத்தில், 54.6 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில், 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட, சேலத்தாம்பட்டி ஏரிக்கு அருகே உள்ள தாமரை, தளவாய்பட்டி, வளையப்பட்டி ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து உபரிநீர் வந்து சேர்கிறது. இத்துடன் கனமழையால், சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர், மழைநீர், சிவதாபுரம் பகுதியை சூழ்ந்தது.குறிப்பாக சித்தர்கோவில் பிரதான சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில், 8 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. சிவதாபுரம் சாலை, அரசு பள்ளி, குடியிருப்பு பகுதிகளில், 4 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மாநகராட்சி பணியாளர்கள், மோட்டார்கள் வைத்து மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் தன்னார்வலர்கள், உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கினர். அப்பகுதிகளை கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், தனித்தனியே ஆய்வு செய்தனர்.இதுகுறித்து அப்பகுதி வார்டு கவுன்சிலர் செல்வராஜூ கூறியதாவது: தி.மு.க., ஆட்சியின்போது, சேலத்தாம்பட்டி ஏரியில் விதிமீறி மின் அலுவலகம், ஹவுசிங் போர்டு கட்டப்பட்டன. ஏரியில் தண்ணீர் தேங்கினால் அந்த கட்டடங்களுக்கு ஆபத்து என கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றுகின்றனர். நீர்நிலைகளில் அரசு கட்டடங்கள் ஆக்கிரமித்திருந்தாலும் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இக்கட்டடங்களை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி மதகு வழியே உபரிநீர் வெளியேறினால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.