திருக்குறள் வினாடி - வினா: 285 பேர் பங்கேற்பு
சேலம், டிச. 22-சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி - வினா முதல்நிலை போட்டி, கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நேற்று நடந்தது. அதற்கு விண்ணப்பித்த 499 பேரில், 285 பேர் பங்கேற்றனர். 'ஆப்ஜக்டிவ்' முறையில் தேர்வு நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆய்வு செய்தார்.மாவட்டத்தில் தகுதியான, 3 குழுக்கள் தேர்வு செய்து விருதுநகரில் வரும், 28ல் நடக்க உள்ள இறுதிப்போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் வெற்றி பெறுவோருக்கு முறையே, 2 லட்சம் ரூபாய், 1.50 லட்சம், ஒரு லட்சம் ரூபாய் பரிசுகள் வழங்கப்படும். தவிர சிறந்த, 3 குழுக்களுக்கு தலா, 25,000 ரூபாய் பரிசு உண்டு என, அதிகாரிகள் கூறினர்.