தொகுப்பூதிய ஊழியர்கள் அக்.,9 முதல் மூன்று நாள் கவன ஈர்ப்பு போராட்டம்
மேட்டூர், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை தொகுப்பூதிய ஊழியர்கள் அக்.,9 முதல், 11 வரை மூன்று நாட்கள் சென்னையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில், மேட்டூர் அணை கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில், 25 முதல், 27 ஆண்டுகளாக நான்கு பெண்கள் உள்பட, 48 ஊழியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் வேலை செய்கின்றனர். பெரும்பாலான தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல், எந்தவித அரசு பண பலன்களும் இன்றி ஓய்வு பெற்று விட்டனர். மேட்டூர் அணையில் பணி புரியும், 48 ஊழியர்கள் உள்பட மாநிலம் முழுவதும், 1,000க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஊழியர்கள் வரும், 9, 10, 11 என மூன்று நாட்கள் சென்னை சேப்பாக்கம் அலுவலகம் முன், தமிழக அரசிடம் பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.