சேலம் : உசிலம்பட்டி நகராட்சி தலைவர் உட்பட, மூன்று பேர் நேற்று சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் சகுந்தலா. இவர், தி.மு.க.,வை சேர்ந்தவர். இவரது தலைமையில், தி.மு.க.வின் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, மதுரை தெற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விஜய் ஆகியோர் நேற்று சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள பழனி சாமி வீட்டுக்குச் சென்ற னர். அங்கு பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.அப்போது முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், மகேந்திரன், சரவணன், மாணிக்கம், நீதிபதி உட்பட பலர் உடன் இருந்தனர்.பின், சகுந்தலா, சோலை ரவி, விஜய் ஆகிய மூவரும் நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க.வில் மேல்மட்டத்தில் உள்ள நிர்வாகிகள், எங்களை போன்றவர்களை செயல்பட விடாமல் செய்கின்றனர். இது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தோம். நடவடிக்கை எதுவும் இல்லை. தி.மு.க.வை பொறுத்தவரை, உயர் மட்ட தலைவர்களை சந்திப்பது, சாத்தியமில்லாத விஷயமாக உள்ளது. உள்ளக் குமுறலில் இருந்த நாங்கள், இதில் இருந்து விடுபட விரும்பி, அ.தி.மு.க.,வில் சேர நினைத்தோம். இந்தத் தகவல் தெரிந்து அ.தி.மு.க., தரப்பில் எங்களிடம் பேசினர். பழனி சாமியை சந்திக்க வைப்பதாகக் கூறினர். உடனே ஏற்பாடு செய்தனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை மிக எளிதாக சந்தித்தோம். அவர் முன்பாக, அ.தி.மு.க.,வில் இணைந்து விட்டோம். எங்களை போலவே மதுரை மாவட்டம் மட்டுமல்ல; தமிழகம் முழுதும் தி.மு.க.,வில் பலரும் அதிருப்தியாக உள்ளனர். இப்படி அதிருப்தியாக உள்ள தி.மு.க.,வினர் அடுத்தடுத்து அ.தி.மு.க.,வில் இணைவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.