உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டியிடம் நகை பறித்த கில்லாடி வி.ஏ.ஓ., சிக்கினார் போலீஸ் விசாரணையில் மேலும் பல மோசடிகள் அம்பலம்

மூதாட்டியிடம் நகை பறித்த கில்லாடி வி.ஏ.ஓ., சிக்கினார் போலீஸ் விசாரணையில் மேலும் பல மோசடிகள் அம்பலம்

அ.பட்டணம், தோட்டப்பாடியில், வி.ஏ.ஓ.,வாக செயல்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர், மூதாட்டியிடம் ஒன்னேகால் பவுன் நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், அவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், கருமாபுரத்தை சேர்ந்த, செல்வராஜ் மனைவி ரங்கம்மாள், 62. இவர் கடந்த மே, 26ல், வீடு முன் தென்னங்கீற்று பின்னும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த ஒருவர், ரங்கம்மாளிடம் நுாதன முறையில், 1.3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றார். ரங்கம்மாள் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தோட்டப்பாடியை சேர்ந்த, வி.ஏ.ஓ., பிரபு, 47, நகை பறித்தது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம், கடலுார் மாவட்டம் புதுநத்தம் காலனியில், போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சம்பவத்தன்று ரங்கம்மாளிடம், 600 தென்னங்கீற்று விலைக்கு வேண்டும் என, ஒருவர் கேட்டார். அவர், இரு நாட்களில் பின்னி கொடுப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அந்த நபர், 'காரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீடு வேலை செய்கிறேன். ஒருவர், 1 பவுன் நகை வைத்துவிட்டு வாங்காமல் உள்ளார். அந்த நகை, 25,000 ரூபாய்க்கு ஏலம் வருகிறது. நகையை, உங்களுக்கு குறைந்த விலைக்கு வாங்கி தருகிறேன்' என கூறி, பணம் கேட்டார்.ரங்கம்மாள், 'என்னிடம் ஒன்னே கால் பவுன் சங்கிலி மட்டும் அறுந்த நிலையில் உள்ளது' என்றார். தொடர்ந்து, ரங்கம்மாள் ஆதார் கார்டை, மொபைல் போனில் படம் எடுத்துக்கொண்டார். பின் அறுந்த சங்கிலியை வாங்கிக்கொண்டு, 'அருகே சென்று சரிசெய்து வருகிறேன்' என கூறி சென்ற அவர், திரும்பி வரவில்லை.இதுகுறித்து ரங்கம்மாள் புகார்படி, 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடந்தது. அதில் வி.ஏ.ஓ., பிரபு, மூதாட்டியிடம் நுாதன முறையில் நகை பறித்தது தெரிந்தது. நேற்று முன்தினம் கடலுார் மாவட்டம் புதுநத்தம் காலனியில், அவரை கைது செய்து விசாரித்தோம். அதில் பிரபுவின் தந்தை சின்னசாமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தோட்டப்பாடியில் கிராம உதவியாளராக பணிபுரிந்தபோது, 2002ல் உயிரிழந்தார். இதனால், பிளஸ் 2 முடித்திருந்த பிரபுவுக்கு, கருணை அடிப்படையில், வி.ஏ.ஓ., பணி கிடைத்தது. ஆனால், 2015ல், பணியின்போது, 'போதை'யில் இருந்ததோடு, பணிக்கு சரியாக செல்லாததால், வருவாய்த்துறை அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர்.இந்நிலையில் பிரபு, பல்வேறு இடங்களில், ஆர்.ஐ., - வங்கி ஊழியர் உள்ளிட்ட பல்வேறு அரசு வேலைகளில் இருப்பதாக கூறி, நுாதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.இவர் மீது கும்பகோணம், திட்டக்குடி, சின்னசேலம், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில், திருட்டு, மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக கள்ளக்குறிச்சி, கீழ்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், 2016ல், கண்காணிக்கப்படும் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015 முதலே, தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், தற்போது வரை, அவர், 'சஸ்பெண்ட்' டில் உள்ளார். இறுதியாக கடலுார் மாவட்டம் புது நத்தம் காலனியில், ஆர்.ஐ., என தெரிவித்து, ஒரு பெண்ணை ஏமாற்றி, அவருடன் நெருக்கமாக இருந்ததோடு, பணம் வாங்கி ஏமாற்றியதாக, கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது நகை பறித்த வழக்கில் கைதாகி உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை