கோவில் விழாவுக்கு இடையூறு ஊர் மக்கள் திரண்டு தர்ணா
சேலம், சேலம் மாவட்டம், மல்லியகரை அடுத்த அரசநத்தம் மக்கள், மனு கொடுக்க நேற்று கலெக்டர் அலுவலகம் வந்ததும், திடீரென நுழைவுவாயில் முன், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலக பகுதியில் தடையை மீறி, தர்ணா செய்யக்கூடாது என போலீசார் அறிவுரை கூறி, தடுக்க முயன்றும், மக்கள் தர்ணாவை கைவிடவில்லை. தர்ணாவுக்கு தலைமை வகித்த பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.அதன்பின், மனு கொடுக்க முடிவு செய்து, தர்ணாவை மக்கள் கைவிட்டதும், அவர்களில் நால்வர் சென்று வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:மல்லியகரை அருகே, பழமையான பெரியாண்டிச்சி அம்மன்கோவில் உள்ளது. அதை ஒரு பிரிவினர் ஆக்கிரமித்துள்ளனர்.அந்த கோவிலில் வரும், 16ல் நடக்கும் கும்பாபி ேஷக விழாவுக்கு எங்களுக்கு அனுமதி தராமல், இன்னொரு பிரிவினர் தடுக்கின்றனர். இது தொடர்பாக, பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இரு தரப்பினரையும் விசாரித்து, சுமூகமான முறையில் கும்பாபி ேஷக விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.