துணை முதல்வர் பிறந்தநாளில் நலத்திட்ட உதவி வழங்க வேண்டும்
சேலம்: தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.அதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியாவது: வரும், 27ல் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை, மத்திய மாவட்டம் முழுதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். இதில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தல், மரக்கன்று நடுதல், கட்சி கொடி ஏற்றுதல் உள்ளிட்டவற்றை, தி.மு.க., நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் நல்லாட்சி தொடர, கட்சியினர் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை கொண்டாடுவது, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர செயலர் ரகுபதி, பொருளாளர் ெஷரிப், அவைத்தலைவர் முருகன், மேயர் ராமச்சந்திரன், மாநில தேர்தல் பணிக்குழு செயலர் தாமரைக்கண்ணன், துணை செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.