ஆங்கில ஆசிரியர்களுக்கு வாட்ஸ் ஆப் குழு ஆர்வம் காட்டாதவர் பட்டியல் தயாரிக்க உத்தரவு
சேலம், அக். 22-வாட்ஸ் ஆப் குழு செயல்பாடுகளில் ஆர்வம் காட்டாத ஆங்கில ஆசிரியர்களின் பட்டியல் தயாரித்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில மொழித்திறனை வளர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள, 6 முதல், 8 வரை கற்பிக்கும் ஆங்கில ஆசிரியர்களுக்கும், 9, 10 கற்பிக்கும் ஆங்கில ஆசிரியர்களுக்கும், தனித்தனியே வாட்ஸ்ஆப் குழு துவங்கப்பட்டுள்ளது.ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் வழிநடத்தும் இக்குழுவில், ஆங்கில திறனை மேம்படுத்த பல்வேறு செயல்பாடுகளை பதிவு செய்யவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், அரசு பள்ளி ஆசிரியர்கள் போதிய ஆர்வம் காட்டாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளி ஆங்கில ஆசிரியருக்கு, கற்பிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடர்ந்து வழங்கும் வகையில், வாட்ஸ் ஆப் குழு துவங்கப்பட்டு, சிறு சிறு பயிற்சிகள், செயல்பாடுகள் வழங்கப்படுகின்றன.இதில், அனைத்து ஆசிரியர்களையும் பங்கேற்க அறிவுறுத்தி வருகிறோம். தொடர்ந்து ஆர்வம் காட்டாத ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பட்டியலில் இடம்பெறும் ஆசிரியர்களுக்கு, விடுமுறை நாளில் நேரில் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.