சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? வீடு, கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கல்
மகுடஞ்சாவடி: சித்தர்கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.இளம்பிள்ளை அருகே, பிரசித்தி பெற்ற கஞ்சமலை சித்தர் கோவில்உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, அரசு விடுமுறை நாட்கள், முக்கிய திருவிழா நடைபெறும்போது நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து செல்வர். சேலம்-இளம்பிள்ளை பிரதான சாலை மற்றும் சித்தர் கோவில்- மாட்டையாம்பட்டி பிரதான சாலைகளை, பலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் கடைகளை கட்டி உள்ளதால் சாலையின் அகலம் குறைந்து அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் விபத்துகளும் நடந்து வருகின்றன. கோவிலுக்கு செல்வோரும் அவதிப்படுகின்றனர். புகார்கள் சென்றதால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாக, பல கட்டங்களாக சாலையின் இருபுறமும், நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு உள்ளது என அளவீடு செய்து, 'மார்க்' செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, 50க்கும் மேற்பட்ட வீடு, கடைகளுக்கு முழு அளவில் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.இதேபோல் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஆக்கிரமிப்பு முழு அளவில் அகற்ற நோட்டீஸ் வழங்கினர். ஆனால், பெயரளவிற்கு மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்றியதால், மீண்டும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்பட்டன. இந்நிலையில், தற்போது முழு அளவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏழு நாள் அவகாசம் அளித்து நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இந்த முறையாவது, ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெரிசல் தடுக்கப்படுமா என, அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.