ரூ.1.70 கோடியை மாவட்ட நிர்வாகம் வழங்குமா? கடைசி முயற்சியாக கவுன்சிலர்கள் எதிர்பார்ப்பு
பனமரத்துப்பட்டி: ஒன்றியத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்ள, 1.70 கோடி ரூபாயை, மாவட்ட நிர்வாகம் வழங்குமா என, கடைசி கட்ட முயற்சியாக கவுன்சிலர்கள் எதிர்பார்க்கின்றனர்.பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 13 கவுன்சிலர்கள் உள்ளனர். அதன்படி, தி.மு.க.,வில், 5, அ.தி.மு.க., 6, பா.ம.க., - கம்யூ., தலா, 1 அடங்கும். இதில், அ.தி.மு.க.,வில், 3 பேர், பா.ம.க., - கம்யூ., தலா ஒருவர், தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், அ.தி.மு.க., அணியில், ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் உள்பட, 3 கவுன்சிலர்கள் மட்டும் உள்ளனர். கடந்த செப்டம்பரில் நடந்த ஒன்றிய கூட்டத்தில், 13 கவுன்சிலர்களும், அவரவர் வார்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பட்டியலை வழங்கி, 1.70 கோடி ரூபாயில், 15 பணிகளை மேற்கொள்ள, தீர்மானம் நிறைவேற்றினர். அதற்கான நிதி இல்லை என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவிக்க, திட்டப்பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. டிசம்பருடன் பதவி காலம் நிறைவடைவதால், கடைசி கட்டத்தில் வார்டில் திட்டப்பணிகள் செய்ய முடியாமல், கவுன்சிலர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறியதாவது: கொரோனாவால், 2 ஆண்டுகள் செயல்படமுடியவில்லை. அடுத்து, தலைவர் பதவி தொடர்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே பிரச்னையால், ஒன்றரை ஆண்டுகளாக கூட்டம் நடக்கவில்லை. ஒரு வழியாக கவுன்சிலர்கள் சமரசமாகி கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்றினால், நிதி இல்லை என அதிகாரிகள் கூறினர். 5 ஆண்டில் வார்டில் தலா, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்துள்ளன. இறுதியாக, நாங்கள் கேட்ட நிதியை, மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஒன்றிய பொது நிதிக்கு ஆதாரமான, 15வது நிதிக்குழு மானியம், கடந்த ஆகஸ்ட் முதல் வரவில்லை. பொது நிதி மைனஸில் உள்ளது. நிதியின்றி பணிகள் மேற்கொள்ள, நிர்வாக அனுமதி வழங்க முடியாது' என்றனர். இருப்பினும் கடந்த, 22ல், தலைவர் ஜெகநாதன், வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்துவுடன் சென்று, கலெக்டர் பிருந்தாதேவிடம், 1.70 கோடி ரூபாய் நிதியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.