சிறுவனுக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி பொறி வைத்து பிடித்து உறவினர்கள் கவனிப்பு
சேலம், சேலம் கருப்பூரை சேர்ந்த, 15 வயது சிறுவன், மரவனேரியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் படிக்கிறார். கருப்பூரில் இருந்து பஸ்சில் வந்து, அண்ணா பூங்கா அருகே இறங்கி, மரவனேரிக்கு நடந்து செல்வார். நேற்று முன்தினம் நடந்து வந்து கொண்டிருந்த சிறுவனிடம், இருவர், 'லிப்ட்' கொடுப்பதாக கூறி, இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். சிறிது துாரம் சென்றதும், சாலையோரத்தில் பைக்கை நிறுத்தி, சிறுவனுக்கு, பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அங்கிருந்து சிறுவன் ஓடி தப்பினான். தொடர்ந்து வீட்டுக்கு சென்ற பின், நடந்த விபரத்தை, பெற்றோரிடம் தெரிவித்தார்.இதனால் நேற்று காலை, 8:00 மணிக்கு, பெற்றோர், உறவினர்களுடன், சிறுவன் அண்ணா பூங்காவுக்கு வந்து இறங்கி, வழக்கம்போல் நடந்து சென்றார். அப்போது நேற்று முன்தினம் தொல்லை கொடுத்ததில் ஒருவர் மட்டும் அங்கு வந்து, மீண்டும் தொல்லை கொடுக்க முயன்றார். அப்போது அங்கிருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை பிடித்து, தர்ம அடி கொடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அம்மாபேட்டை மகளிர் போலீசார் விசாரணையில், அவர் சேலம், கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி முகமது அலி, 48, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடுகின்றனர்.