| ADDED : ஜூலை 17, 2024 10:35 PM
சிவகங்கை:வீடியோ ஆதாரத்துடன் புகார் சென்றதால், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் ஜேசுதாஸ், கண்ணன், எஸ்.ஐ., ராஜாமுகமது உட்பட குழுவினர் ரெய்டு நடத்தினர். அப்போது புரோக்கர் மற்றும் அலுவலக ஆவண அறையில் இருந்து கணக்கில் காட்டப்படாத 91,800 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். காரைக்குடி போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் விடுப்பில் சென்றதை அடுத்து, விருதுநகர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சித்ரா, காரைக்குடியில் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிந்தனர்.நேற்று முன்தினம் வாகனத்திற்கான லைசென்ஸ், புதிய வாகன பதிவு உள்ளிட்ட பணிக்காக அலுவலகத்திற்கு வந்தவர்களிடம் முன்கூட்டியே வசூல் செய்யப்பட்டுள்ளது. கவனிப்பு செய்தவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ், வாகன பதிவு போன்ற ஆவணங்களில் கையெழுத்திட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதில் அதிருப்தியான வாகன உரிமையாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணம் வசூலிப்பதை அலைபேசியில் வீடியோ எடுத்து, அதையே ஆதாரமாக, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பினர். இந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான், போலீசார் ரெய்டு நடத்தி, கணக்கில் காட்டப்படாத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.