| ADDED : ஜூலை 29, 2024 12:07 AM
தேவகோட்டை : தேவகோட்டை அருகே ஊரவயலில் மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடம் கருத்து வேறுபாடு இருந்தது. இதன் காரணமாக கோவிலை பூட்டிவிட்டு, சாவியை வி.ஏ.ஓ.,விடம் ஒப்படைத்தனர். இது குறித்து தேவகோட்டை தாசில்தார் அசோக்குமார் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும், தீர்வு எட்டவில்லை. இந்நிலையில் தாசில்தார் அசோக்குமார் பணிமாறுதல் செய்யப்பட்டார். தினமும் கோவிலை திறந்து பூஜை செய்யலாம். ஆனால், பேச்சு வார்த்தைக்கு பின்பு தான் திருவிழா நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், சாவியை ஒப்படைத்திருந்தனர்.இது குறித்து அறிந்த சொர்ணம், அவரது மனைவி காளிமுத்து, பூமிநாதன், இவரது மனைவி செல்வராணி, மற்றும் சுப்பிரமணியன், அவரது மனைவி சுந்தரி ஆகிய 5 பேர்களும், தேவகோட்டை கோட்டாட்சியரிடம் புகார் அளிக்க வந்தனர். அப்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாசில்தார் அசோக்குமார் வெளியே வந்தார். அப்போது, எதிர்தரப்பிற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக கூறி, தாசில்தாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.மேலும், தாசில்தாரை தள்ளிவிட்டு, அவரை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தாசில்தார் புகாரின்பேரில், தேவகோட்டை போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிந்தனர்.