உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடிந்து கிடக்கும் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி

இடிந்து கிடக்கும் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி

சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், திருப்புத்துார் ரோட்டில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி செயல்பட்டது. இங்கு 4 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 120 மாணவர்கள் தங்கி பள்ளிக்கு சென்று வந்தனர். இக்கட்டடம் கட்டி 35 ஆண்டிற்கு மேலானது. இதை முறையாக பராமரிக்காமல் விட்டதால், காலப்போக்கில் விடுதி கட்டடம் சிதிலமடைந்து, இங்கு தங்கியிருந்த மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.இதனால், கோகுலேஹால் தெருவில் இருந்த கல்லுாரி மாணவர் விடுதியில், பள்ளி மாணவர்களை தங்க வைத்தனர். இதனால், மாணவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டது. இதனை தவிர்க்க பள்ளி மாணவர்கள் விடுதியை சில மாதங்களுக்கு முன், சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் துணை கலெக்டர்களுக்கு கட்டி கொடுத்துள்ள இல்லத்திற்கு மாற்றம் செய்தனர்.

துணை கலெக்டர் வீட்டில் விடுதி

மாணவர் விடுதியில் 120 மாணவர்கள் தங்கி படிக்க வேண்டிய இடத்தில், துணை கலெக்டர் வீட்டில் விடுதி நடப்பதால், காலப்போக்கில் இடநெருக்கடியில் தவித்த மாணவர்கள் விடுதியை விட்டு சென்றுவிட்டனர். தற்போது சிறிய குடும்பமே தங்கும் விதத்தில் கட்டியுள்ள துணை கலெக்டர் இல்லத்தில் 36 மாணவர்களும் இட நெருக்கடியில் தான் தங்கியுள்ளனர். 120 மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டிய ஆதிதிராவிடர் நலத்துறை, வெறும் 36 பேர்களுக்கு மட்டுமே ஒரு வீட்டை பிடித்து கொடுத்துள்ளது.மற்ற மாணவர்களை பற்றி சிந்திக்காமல் அவர்களை அப்படியே விட்டுவிட்டது. இதனால், இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உறவினர்கள், குறைந்த வாடகையில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அரசு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு விரைவில், விடுதி ஒன்றினை அனைத்து வசதியுடன் கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விடுதி வசதியின்றி தவிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: பழைய விடுதி கட்டடத்தை இடித்து அகற்ற அரசு அனுமதி வழங்கிவிட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்படாததால், கட்டடம் இடிக்கப்பட வில்லை. அதற்கு பின் அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே மாணவர்கள் விடுதி கட்ட முடியும். நிதி ஒதுக்கினால், விடுதி கட்டி முடிக்க இன்னும் 2 ஆண்டுகளாகும். அதுவரை மாணவர்களுக்கு போதிய விடுதி வசதியை செய்து கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ