விவசாயிகள் பதிவு நீட்டிப்பு
திருப்புத்துார்: விவசாயிகள் பதிவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். அரசின் மானிய திட்டங்கள், பலன்களை விவசாயிகள் எளிதாக பெறுவதற்கும், வேளாண் சேவை பெறுவதற்காக விவசாயிகளுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அதற்கான பதிவிற்கு விவசாயிகள் 10(1) நில ஆவணம், ஆதார் சரிபார்த்து ஊராட்சிகளில் பதிவு நடைபெற்று வருகிறது.பதிவிற்கான கடைசி நாளாக பிப்.20 அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலோனோர் பதிவு செய்யவில்லை. பதிவுக்கு பயன்படுத்தப்படும் செயலி வேகமின்மை பதிவை தாமதப்படுத்தியது.மேலும்பல விவசாயிகளின் நிலங்கள் முன்னோர்கள் பெயரில் இருப்பதாலும், கூட்டுப் பட்டாவாக இருப்பதாலும் பதிவு செய்ய முடியவில்லை. ஆதார்களில் தற்போதைய அலை பேசி பதிவு செய்யாததாலும் ஆதார் ஒருமுறை கடவுச் சொல் மூலம் சரிபார்த்து பதிவு செய்ய முடியவில்லை. இணையதள வேகமின்மையால் அரசின் நில ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியாமலும் பலர் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் இதுவரை 35 சதவீத விவசாயிகளே திருப்புத்தூர் வட்டாரத்தில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பதிவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.